கிரெமில்லட் சகோதரிகள் - காமிக்ஸ் விமர்சனம்.
கிரெமில்லட் சகோதரிகள்
தொகுதி 1 : சாரா'வின் கனவு.
மூன்று உடன் பிறந்தவர்கள் (சகோதரிகள்) பற்றிய கதை இது. மூத்தவள் சாரா , இவளுக்கு ஒரே கனவு தினம் ,தினம் சிறு, சிறு மாற்றங்களுடன் வருகிறது. அது என்ன கனவு என்றால்? ஒரு பெரிய காடு, அதில் இவள் உட்பட மூன்று சகோதரிகளும் தண்ணீருக்கு அடியில் மிதப்பது போல் மிதந்து பயணம் செய்வார்கள். அப்போது சொறி மீன்கள் ( ஜெல்லி மீன்கள்) வரும், இவர்கள் மூவரும் மரத்திற்குப் பின்னால் மறைந்து கொள்வார்கள். பிறகு சொறி மீன்களை பின் தொடர்ந்து போவார்கள். அந்த மீன்கள் இவர்களை ஒரு பெரிய மரத்திடம் கொண்டு சேர்க்கும். அந்த மரத்தில் ஒரு கண்ணாடி மாளிகை இருக்கும். நமது சாரா அந்த மாளிகை அருகில் போய் எட்டிப் பார்ப்பாள். உள்ளே ஓர் அறை தெரியும். அந்த அறை சாரா அவளின் அம்மா அறைபோல் இருக்கும். அதில் ஒரு படுக்கை இருக்கும். அதில் சிறு சொறி மீன் ஒன்று இருக்கும். அதைப் பார்த்து " நீ யார்?" என்று சாரா கத்துவாள். அந்த மீன் திரும்பிப் பார்க்கும். அப்போது சாராவிற்கு விழிப்பு வந்து விடும். இது தான் அந்த கனவு. தினமும் இதே கனவுதான். இந்த கனவின் பின் இருக்கும் மர்மம் என்ன என்பதை அறியச் சாரா முயல்கிறாள். இந்த வேலையில் தன் உடன் பிறந்த சகோதரிகளையும் சேர்த்துக் கொள்கிறாள். இந்த கதையின் பெரிய பலம் ஓவியங்கள் தான். மிகச்சிறந்த ஓவியங்கள். இரண்டாவது பலம் கதை சொன்ன விதம். தமக்கையின் போக்கு தங்கைகளிடம் ஏற்படுத்தும் தாக்கம் மிக அழகாகச் சொல்லப்படுகிறது. தன் உணர்வை யாரும் புரிந்து கொள்வதில்லை என்ற எண்ணத்தில் இருக்கும் இரண்டாம் சகோதரி; பூனைகளிடம் அதிகம் அன்பு காட்டும் கடைக் குட்டி சகோதரி என்று கதை அழகாகச் சொல்லப்படுகிறது. குடும்ப உள் சிக்கல்கள் நன்றாகவே காட்டப்பட்டுள்ளது. ( அதிரடி ரசிகர்களுக்கு ஏற்ற கதை அல்ல) இது உணர்வுப் பூர்வமான கதை.
Europe comics வெளியிட்டது. (Ebook Google Play)
Writers: Di Gregorio and Alessandro Barbucci
Artist: Alessandro Barbucci
Colorist: Alessandro Barbucci
Letterer: Cromatik Ltd.
Translator: L. Benson
Published by: Dupuis/Europe Comics
Number of Pages: 76
Original Publication: 2020
https://play.google.com/store/books/details/Di_Gregorio_Giovanni_The_Gr%C3%A9millet_Sisters_Volume?id=yrDvDwAAQBAJ